பா

என் மரபுக் கவிதைகள்

My Photo
Name:
Location: சென்னை, தமிழ்நாடு, India

Monday, April 14, 2008

தளிர்மா துளிர்க்க முந்திடுமா?

தளிர்மா துளிர்க்க முந்திடுமா?


தையே என்று சொல்லிவிட்டால்
---- தளிர்மா துளிர்க்க முந்திடுமோ?
மெய்யும் குளிரும் முன்பனியை
---- முட்டி உடைக்க இரண்டாமோ?
வெய்யில் நாளைத் தொடங்குதற்போல்
---- வேனில் ஆண்டைத் துவக்கிடுமே
அய்யே என்ன அரசாணை
---- அடியேன் நைந்து நொந்தேனே!


நடராஜன்.

Sunday, April 13, 2008

புத்தாண்டு வாழ்த்துகள்

அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!

சர்வதாரி வருக! சகலநன்மை தருக!!

(கோனினம் = அரசு,
மீனமும் வந்த காலம் = வருகின்ற பங்குனி மாதம்)

வானமும் மாரி பெய்து
---- வாழ்க்கையும் வண்ணம் சேர்ந்து
கோனினம் கொள்கை சார்ந்து
---- கொடுமைகள் குறைத்து காத்து
மீனமும் வந்த காலம்
---- மீதமாய் இன்பம் மட்டும்
மானுடம் காணு மாறாய்
---- வாருமே சர்வ தாரி!
* * * * * *
அன்புடன்
நடராஜன்.

Monday, July 16, 2007

குழலிப் பாதை

இரண்டாயிரத்து இருபது என்ற தலைப்பில் ஒரு மடற்குழுவில் நான் எழுதிய மரபுக் கவிதை.

அன்புடன்,
நடராஜன்.

* * * * *


குழலிப் பாதை


===============


இருபதுஇருபது என்றவோர் அருங்கருத்தில் கவிசெயவே
பெருமுயற்சி செய்தநான் பெற்றதெல்லாம் சுழியேதான்.
நனவுலகில் முடியாத நடப்பையெலாம் வெகுசுளுவாய்
கனவுலகில் முடித்துவிட்டுக் களித்திருப்பது என்வழியே!

கைவந்த இவ்வழியை கைகொள்ள இப்போதும்
மெய்சாய்த்துக் கண்ணயர்ந்து பொய்நனவில் ஆழ்ந்துவிட்டேன்.

கடற்கரை நிலையமொன்றில் கவின்மிகக் காத்திருந்த
தொடர்வண்டி உள்ளிருந்தேன் தொடங்குநிலை பயணத்தில்
கீழ்க்கரையின் வெள்ளலைகள் கிளரோசை தொடர்ந்தொலிக்க
ஆழ்கடலின் மேலாக அயப்பாதை சென்றதுவே!

(அயப்பாதை = இருப்புப்பாதை)

மாகடல்மேல் கூண்டிட்டு மாகால்கள் தாங்குகின்ற
நீளரவின் என்புஒத்து நீண்டுசெல்லும் கடற்பாலம்
எங்கே(ஏ)கும் இப்பாதை எதிர்இருக்கை பயணிசொன்னார்
(இ)லங்கையின் வடமுனையாம் காங்கேசன் துறையென்றார்.

(நீளரவின் என்பொத்து = நீண்ட பாம்பின் எலும்புக்கூடு போன்று)

இருபதுஇரு நூறாய்க்காண் திறன்பெற்றேன் கனவுலகில்
கருப்பெழுத்தில் தூரத்தில் கட்டமஞ்சள் பலகையொன்றில்
என்தமிழில் அதனடியில் இந்தியத்தில் இங்கிலத்தில்
சொன்னதுஇவ்வூர் குழகேசர் வாழ் கோடிக்கரைஎன்று.

(இந்தியம்=இந்தி, இங்கிலம்=ஆங்கிலம்)

பாராத உலகிலுமே பார்க்கவும் இயலாத
கார்ஆர்ந்த குழலழகி கல்கிமகள் பூங்குழலி
ஏர்ஆர்ந்த கன்னியவள் என்மனம்கொள் கள்ளியவள்
நீராடி நிலமாடி திளைத்திருந்த இடமிதுவே!

தென்கரையின் கீழ்க்கரையின் தரங்கொலிகள் தன்ஒலியாய்,
வென்றுநிற்பாள் ஆளுமையால் வெகுஆழக் கடற்பாதை.
மாகடலின் நீர்த்தளும்பல் தாலாட்டாய் கொண்டவளாம்
வேகமிகு வீரமிகு நெய்தல்மண் பெண்ணரசி.

(நெய்தல்=கடலும் கடல் சார்ந்த இடமும்)

அவள்சென்ற இப்பாதை இதுகுழலிப் பாதை

அதனடியில் கடலாழம் பதிமூன்று மீட்டராகும்
அதிர்கின்ற பூமியையும் ஆழிப் பேரலையையும்
எதிர்கொள்ளும் வகையான ஏற்றமிகு கட்டுமானம்!

(அதிர்கின்ற பூமி=பூகம்பம், ஆழிப் பேரலை=சுனாமி)

கடல்மேலே பலமீட்டர் உயர்நின்றுக் குறுக்கிட்டுத்

தடமேகும் நாவாய்க்காய் திறப்பெல்லாம் செய்துவைத்தார்
பணிசெய்த பொறியரின் பாங்கினை வியந்துநிற்க
இனியதோர் சங்கொலியில் இப்பயணம் தொடங்கிற்று.

(நாவாய்=கப்பல், பொறியர்= கட்டிடப் பொறியாளர்கள்)

சடுதியில் செலுத்திய சகடைகள் உயிர்த்தன

கடல்நடு கூண்டினில் காட்சிகள் விரிந்தன
தூரத்துக் கலங்கள் துண்டுகளாய்த் தோன்ற,
ஈரமாய்க் கயற்கொத்து அரிதாய்க் காண,
ஏகாந்தப் பறவை என்னை மயக்க,
ஆகாய நீலம் ஆழ்மனம் துய்க்க,
அரைமணிப் பயணம் அடைந்தது துறையும்
வரைநடு தீவின் வடமுனை வந்தேன்.
ஏலேல சிங்கனும் மாறனும் சோழனும்
மார்தட்டிப் பொருது மாவீரம் சொறிந்த,
கேதீசரனொடு கதிர்காமன் அருள்செயும்,
ஓதி வரங்கொள் ஓர்அரக்கன் வதம்செய
மாலவன் கால்வைத்த இலங்கை மண்ணில்

மாதவப் பயனாய் கால்பட மகிழ்ந்தேன்.
ஒற்றையாய் குழலி அன்றுசெய்த வேலை
கற்றைப் பொறியரின் இற்றை சாதனை.
நானுமோர் பொறியன் நன்றாய் சிலிர்த்தேன்
காணுகின்ற கனவும் சிலிர்ப்பால் சிதைய
இரண்டாயிரத்தேழுக்குள் வந்தேன்
இரண்டாயிரத்திருபதிலே எம்மனார்
சிறப்புக்கு இஃதொரு பருக்கை பதமே!

(கயற்கொத்து=மீன்கூட்டம்)
(வரை=மலை, வடமுனை=வடக்கு முனை)
(மாறன்=பாண்டியன்)
(ஓதிவரங்கொள்ஓர்அரக்கன்=ராவணன்)

**** **** ****
ஓகை நடராஜன்

**** **** ****

Monday, November 20, 2006

நவமீன்

தூக்கிலிடும் கயிறொத்து தொங்கியதோர் தூண்டில்ஊனை
ஆக்கிற்று தன்னுணவாய் அகன்றவாய்ப் பெருங்கெண்டை.
வாக்கின்றி துடித்தலறி வாழ்க்கையற்று மரித்ததனை
நோக்கியவோர் சிறுகெண்டை நுன்னறிவு பெற்றதுவே!
மீண்டுமங்கே தூண்டில்ஊனும் மிகமணமாய்த் தொங்கிடவே
வாண்டுமீன் தன்னறிவில் வந்திட்ட குறுகுறுப்பால்
வேண்டுமந்த ஊணென்ற வேகமிகு ஆசைகளே
ஆண்டததன் சிற்றறிவை; ஆதலினால் துணிந்ததுவே!

ஆனாலும்,

படிப்பினையை பெருங்கெண்டை தந்ததனால் மெல்லெனவே
கடித்தாலும் கடிநடுவே கடுமிரும்பைக் கடித்திட்டு,
துடிக்கவைக்கும் பல்வலியால் துவண்டந்தச் சிறுகெண்டை.
படிப்பினைகள் கிடைத்தற்றே! பலவிதமாய்க் கிடைத்தற்றே!!
உள்ளிருக்கும் கடுமைவரை ஊடாமல் உண்டாலும்
உள்ளறிவின் கவனமற்ற ஒருநாளில் முனைகவ்வ,
முள்முனை மறைமுள்ளும் பூட்டியது வாய்குள்ளே;
துள்ளியதால் மேன்மேலும் தூர்ந்தது விடுதலையும்.

இதன்பிறகு

தக்கையின் தவிப்பால் சிக்கியது மீனென்று
அக்கயிறு இழுத்தோன் ஆத்திரம் கொண்டான்;
இச்சிறு மீனுமோ என்முள் புகுமென
பிய்த்தெறிந்து வீசினன் தன்முள் விடுக்கவே!
பிழைத்தனம்! பிறந்தனம்!! மீனாக மீண்டும்,
பிழையினி செய்யோம், இலவசம் இவ்வாழ்க்கை
சவத்தில் பிறழ்ந்த சிறுகெண்டை நவின்றது.
கவர்ந்திடும் இலவசம் கொண்டது அபாயம்
தவறுகள் பலசெய வந்திடும் உபாயம்
நவமென நவமென நடந்திடும் வாழ்வு
துவங்கிடு இன்றே தொடங்கிடு இன்றே!


(இப்பாடல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா என்ற பாவகையில் முயன்றிருக்கிறேன். இலக்கணம் சரியா என்று பெரியோரைக் கேட்க வேண்டும்.)

(தூண்டில் என்ற சிறுகதை ,ஓகை பதிவில் இருகிறது. அதன் கதையே இக்கவிதை)

Friday, October 20, 2006

வெல்வெல் சூழல்

*
நேரிசை ஆசிரியப்பா:

என்பெயர் கூவம் சென்னையில் துர்மணத்
துன்பம் பரப்பி, தூய்மை கெடுத்து,
நோய்கள் கொடுக்கும் நுன்னுயிர் வளர்த்து,
பாய்புனல் இல்லா தேங்குநீர் தன்னில்
கொசுக்களின் பண்ணைக் கொள்ளையாய் செய்து,
அசுத்த குப்பைகட்கு அடைக்கல மாகி,
கொலைப்பிணம் தள்ளிடும் கொல்லை யுமாகி,
புலையரின் தீச்செயல் புகலிட மும்ஆகி,
தொலைவின் வந்து அலைகடல் சேராது
பாழாய்ப் போன வாழா வெட்டிநான்.

சென்னை நகரீர், புறநகர் மக்காள்,
என்சொல் கேட்பீர் சற்றே செவிமடுப்பீர்!
விந்தை பலசெயும் விடுதலை எனக்களிப்பீர்!
சிந்தயில் கொள்வீர் சீர்மிகு சென்னையீர்,
நுந்திறன் நீர்அறியீர் நும்மையாம் அறிந்ததால்
விளம்புவன் யானொரு வெல்வெல் சூழல்.

விடுதலை அளிப்பீர்! விடுதலை பெறுவீர்!
கெடுதலைக் கழிவுகள் கலத்தலைத் தடுப்பீர்!
என்னுள் கலக்கும் எண்ணரும் விடங்கள்
இன்னல் மிகுத்திடும் மண்வளம் குறைத்திடும்.
இவைகட் கெனவே தனிவழி செய்வீர்!

மலையிடைப் பிறந்தோ, மாமடு பிறந்தோ,
அலைகடல் அடையவே ஆண்டவன் படைத்தான்.
முன்னூற் றாண்டில் இயற்கையில் மாறினேன்
தன்னிலை தவழ்ந்தே தரங்கம் அடைந்திலேன்.
இந்நூற் றாண்டின் ஈடிலா மாந்தர்நீர்
எந்நோற் றீரோ எல்லாம் அறிந்தீர்
இதற்கொரு நல்வழி இயற்றுவீர்
வியத்தகு வளம்வருங் காலம் பெறுவொமே!

***

Sunday, October 15, 2006

வஞ்சித்துறை

*


- - - - - ஏராளமான மரபுக் கவிதை வகைகளில் ஒன்றான வஞ்சித்துறை என்னும் வகையில் நான் செய்த ஒரு கவிதை.

- - - - - பணித்த செயல்கள்
- - - - - இணைத்த துயர்கள்
- - - - - பிணைத்த உலகில்
- - - - - அணைப்பதும் அன்பே!

- - - - - காண்பதற்கு எளிதாக இருக்கும் இக்கவிதை வடிவின் இலக்கணமும் மிக எளியது.

- - - - - இலக்கணம்: அளவொத்த குறளடிகள் நான்கினால் தனித்து வருவது.

- - - - - அவ்வளவே!

- - - - - அளவொத்து வருதல் என்றால் நான்கு அடிகளிலும் ஒத்த சீர்கள் ஒத்த ஓசை அளவினதாய் இருக்க வேண்டும். குறளடி என்றால் இரண்டே சீர்கள் கொண்ட அடி. மரபுக் கவிதைகளுக்கே உரித்தான ஓசை நயமும் எதுகை மோனைகளும் இருக்க வேண்டும். நான் பார்த்த பழைய பாடல்கள் நான்கு அடிகளிலும் ஒரே எதுகை வருமாறு அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு எடுத்துக் காட்டு:

- - - - - கண்ணன் கழலினை
- - - - - நண்ணும் மனமுடையீர்
- - - - - எண்ணும் திருநாமம்
- - - - - திண்ணம் நாரணமே! - நம்மாழ்வார் பாடல்.

- - - - - முதலில் நான் சொல்லியிருக்கும் பாடல் இவ்வகையில் நான் எழுதியதில் இரண்டாவதாகும். முதலாவது:

- - - - - வஞ்சித்துறை எழுதிட
- - - - - பிஞ்சுக்கவி முயன்றால்
- - - - - மிஞ்சிட்ட செயலாமோ!
- - - - - கிஞ்சித்தும் அஃதிலையே!!

என்னை வஞ்சித்துறையில் எழுதச் சொல்லி ஷைலஜா அவர்கள் எழுதிய கவிதை:

- - - - - பண்ணிய பாவம்போம்
- - - - - நண்ணிடும் நன்மைகள்
- - - - - அண்ணல் அரங்கனை
- - - - - எண்ணுக என்றுமே!

ஷைலஜா அவர்களுக்கு நன்றி.

இப்போது ஒன்று செய்தேன்.

- - - - - தனியே நொந்தேன்
- - - - - எனையே மறந்தேன்
- - - - - இனியே என்செய
- - - - - குனியா வந்ததே!

நீங்களும் முயன்று பாருங்கள். இங்கே உங்கள் கவிதைகளைக் குவியுங்கள்.


*

Saturday, October 07, 2006

வண்ணத்தி நன்றி...

*
வண்ணத்தி நன்றி...

என்னின் மகரந்தம் எடுத்துயார் வருவார்
பொன்வண்டே உனக்கே பொறுத்தேன் நீயோ
அஞ்சிரைத் தும்பி அடடா நீயோ
கங்குல் நிறத்துக் கருவண்டே நீயோ
இங்கும் மதுவுண்ட என்தேனீ நீயோ
இப்போது வந்தனை வண்ணத்தி நீயோ
தப்பாது கொணர்ந்தாய் தயைசெய்தாய் நீயே
எண்ணி மகரந்தம் எடுத்தே வந்தனை
மண்ணில் சூம்பிநான் மடியா வண்ணம்
என்னின் மகரந்தப் பயணம் தந்தனை
சூலுறச் செய்தனை பாலுறச் செய்தனை
காய்சுமப்பேன் நானினி காணே! இன்றினி
தாய்நான் நவின்றேன் தகைந்த நன்றியே!




*

சொல்லத் துடிக்கிறது நிலவு

*


ஒரு அறிவியல் புனைகதைக் கவிதை.



_ _ _ _ பெருவின்கல் ஒன்று புவியை நெருங்க
_ _ _ _ நவிலத் துடித்த நிலா.



*

அமாவாசை

*


அமாவாசை
===========

எங்கே சென்றனை நிலவே?
----- இன்றும் ஒருசிறு விடுப்பா?
மங்கிய ஒளியினில் புதிதாய்
----- மறுநாள் முடிந்ததும் வருவாய்
தங்கக் கம்பிபோல் சிறிதாய்
----- தருவாய் தரிசனம் மெலிதாய்
திங்கள் குணமெனத் தெரிந்தும்
----- திரும்ப வந்தது வியப்பே!



இன்று கண்டிட வேண்டும்
----- இரவும் ஒளியுடன் வேண்டும்
சென்று தேடிட வேண்டும்
----- சேர்ந்த இடமதும் ஏதோ?
தொன்று தொடர்ந்திடும் ஜாலம்
----- தொலையும் உத்தியை நானும்
வென்ற மனிதனாய் மாற
----- வித்தை கற்றிட வேண்டும்.


*

வெண்மையே வாணீ

*


கருமையின் பிடியைக் கடந்தயென் அறிவு
பெருவான் நீலமாய் பெற்றது நிர்மலம்
பச்சை முளைகளாய் மஞ்சள்பூ ஞானமாய்
வித்தைபல என்னுள் விதைத்தாய் வாணீ
நிறங்களின் ஒளியெலாம் நிறைத்த வெண்மையே
இறுதிச் செம்மைக்கும் இட்டுச் செல்நீயே!


(எல்லா நிறங்களின் கலவையே வெள்ளை நிறம். கருமையான அறியாமை நீக்கி, தெளிவின் நீலம் பரப்பி, பசுமையாய் அறிவு முளைவிடச் செய்து, அதன் பலனான மங்கலத்தைப் பெறச் செய்த வாணியே, நீயே எல்லா நிறங்களையும் உள் வைத்திருக்கும் வெண்மை. நான் பெறாத செம்மைக்கும் நீயே என்னை இட்டுச்செல்வாயாக! - இந்தக் கருத்தைத்தான் அகவலில் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.)



*

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது