வெல்வெல் சூழல்
*
நேரிசை ஆசிரியப்பா:
என்பெயர் கூவம் சென்னையில் துர்மணத்
துன்பம் பரப்பி, தூய்மை கெடுத்து,
நோய்கள் கொடுக்கும் நுன்னுயிர் வளர்த்து,
பாய்புனல் இல்லா தேங்குநீர் தன்னில்
கொசுக்களின் பண்ணைக் கொள்ளையாய் செய்து,
அசுத்த குப்பைகட்கு அடைக்கல மாகி,
கொலைப்பிணம் தள்ளிடும் கொல்லை யுமாகி,
புலையரின் தீச்செயல் புகலிட மும்ஆகி,
தொலைவின் வந்து அலைகடல் சேராது
பாழாய்ப் போன வாழா வெட்டிநான்.
சென்னை நகரீர், புறநகர் மக்காள்,
என்சொல் கேட்பீர் சற்றே செவிமடுப்பீர்!
விந்தை பலசெயும் விடுதலை எனக்களிப்பீர்!
சிந்தயில் கொள்வீர் சீர்மிகு சென்னையீர்,
நுந்திறன் நீர்அறியீர் நும்மையாம் அறிந்ததால்
விளம்புவன் யானொரு வெல்வெல் சூழல்.
விடுதலை அளிப்பீர்! விடுதலை பெறுவீர்!
கெடுதலைக் கழிவுகள் கலத்தலைத் தடுப்பீர்!
என்னுள் கலக்கும் எண்ணரும் விடங்கள்
இன்னல் மிகுத்திடும் மண்வளம் குறைத்திடும்.
இவைகட் கெனவே தனிவழி செய்வீர்!
மலையிடைப் பிறந்தோ, மாமடு பிறந்தோ,
அலைகடல் அடையவே ஆண்டவன் படைத்தான்.
முன்னூற் றாண்டில் இயற்கையில் மாறினேன்
தன்னிலை தவழ்ந்தே தரங்கம் அடைந்திலேன்.
இந்நூற் றாண்டின் ஈடிலா மாந்தர்நீர்
எந்நோற் றீரோ எல்லாம் அறிந்தீர்
இதற்கொரு நல்வழி இயற்றுவீர்
வியத்தகு வளம்வருங் காலம் பெறுவொமே!
***
8 Comments:
நடராச சீனிவாசா நலமா
நன்றே நன்று நன்தமிழ் மாநீர்வாழ்
சென்னி நகர் மேவி கவி தந்தீர்
முத்தும் வைரமும் முடிஞ்ச வரிகள்தாம்
கூடிக்கவி பாடக் கவியின்றி
நாடிவந்தோம் அய்ய வாடிக் கிடக்கும்
தமிழ்கூடும் உணர்வுக் களத்தில்
நீவிர் பாடிக் களித்தால் மேன்பெறும்
வெண்பா திரியும் அவர்தம்பா உய்வும்
நண்ப பலர்கூடி நவில்வோம் கவிவாரீர்
சுட்டி நான்தருவேன் தவறாயின் நீக்க
தலையில் குட்டி அனுப்பாதீர் நன்றி
வணக்கம் கவிகள் பெருமானே
www.unarvukal.com/ipb
கூவமே உன் பெருமை உரைப்பேன் கேளிங்கு
போவோமே நாமிங்கு உன் பெருமை உணர மறுத்தால்
ஏனிந்தக் கோலமிங்கு உனக்கு வந்தது
எம்மக்கள் உனைச் செய்த துயரிங்கு
உரைத்திடவோ மொழியில்லை
ஊருக்கு ஒரு நதியாய் நீயிங்கே இருக்கையிலே
பேருக்குத் தாயெனச் சொல்லி புறத்தே தள்ளிவிடும்
புலையரின் நிலை போல உனையிங்கு ஒதுக்கி விட்டார்
தாயவளே நீயவரை மன்னித்து அருள் புரிவாய்
நீ கண்ட வரலாறு ஒருவருமே கண்டதில்லை
நீ நடந்த தடயங்கள் யாரிங்கும் உணர்ந்ததில்லை
நீ பட்ட பாட்டினையே எவருமிங்கு நினைப்பதில்லை
நின் பெருமை பெசுதற்கோ எனக்கேதும் சொல் வரவில்லை
சென்னப்பன் முதல் இன்றிருக்கும் கருணாநிதிவரைக்கும்
அத்தனை பேரும் உனை மறந்தார் ஆனாலும் தாயே நீ
எதுவும் நடகாதது போல நிமிர்ந்து நடை போடுகிறாய்
நின்னுள்ளே கழிவதனையும் கழித்த பின்னும்!
வளமாக நீ பாய்ந்த நாளுனக்கு நினைவிருக்கும்
வளம் பெருக்கி மாந்தரையே போற்றியதும் நினைவிருக்கும்
உளம் கறுத்து உனையிங்கு அவமதித்த காரணத்தால்
இலம் இன்றித் திரிகின்றார் இனிய தமிழ் நாட்டவரும்!
உனை மதிக்கும் நாளெதுவோ அதுவன்றோ உய்யும் நாள்
என நினைக்க மறந்தாரே இங்கிருக்கும் ஆட்சியாளர்
இருந்தாலும் நீயென்றும் பொங்கியதாய் சரித்திரமும்
இதுவரைக்கும் யாமிங்கு கண்டதில்லை கேட்டதில்லை
அதுவன்றோ நின் பெருமை தாயவளே போற்றுகின்றேன்
எதுவரையில் உன் பொறுமை எமக்கிங்கு தெரியாது
ஏசுநாதரை யாமிங்கு நேரிலே கண்டதில்லை
ஏசுபவர்க்கும் இன்முகம் காடும் பொன்மகளே நீ வாழ்க!
ஏதுமறியா பாலகர் ஏதுமறியாமல் செய்கின்ற
பேதமைச் செயல்களால் மனம் வருந்தாமல் நீயும்
அவர் மீது கோவிக்காமல் கருணை காட்டி
இருக்கவே வேண்டுகிறேன் ஏதும் செய்ய இயலாத யான்!
வெண்பா, ஆசிரியப்பா இல்லாமல் உள்ள வரக்கூடாதான்னு ஒரு கணம் யோச்சிச்சேன். பரவாயில்லை கூவத்தை பற்றி மணக்கும் எழுத்துக்களால் வடித்ததை பாராட்டாமல் செல்ல மனம் ஒப்பவில்லை.
ஆகவே
நன்று ஓகை.
எஸ்.கே அய்யா,
பிரமிப்பா இருக்கு!
'பா வாழ',
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி. உங்கள் தளத்திற்கு வந்தேன். பிரமாதம். மீண்டும் வருகிறேன்.
எஸ்கே, அபாரம்.
நான் கூவம் மக்களை வேண்டுவதாக எழுதியிருந்தேன். நீங்களோ தாயாக எழுதிவிட்டீர்கள். இதையே மரபில் மறுபடி எழுத முயல்கிறேன்.
தம்பி, வாங்க வாங்க!!
எல்லா பாவும் உள்ளே வரனும்னுதான் எனக்கு ஆசை. அதுக்கு எல்லோரும் உள்ளே வரனும். மரபுக் கவிதைகள் புலவர்களுக்கானது மட்டுமில்லை என்பதே என் கருத்து.
ஐயா,
வழக்கம் போல் ஆசிரியப்பா பற்றிய இலக்கணக் குறிப்பு கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கிறேன். சரியாக இருக்கிறதா பாருங்கள்.
சற்றே பார்த்தேன் ஆசிரி யப்பா
விதிகளை, எளிதாய் தோன்றுதே எனக்கு
ஈரசை சீர்களாய் நான்கினை இடவே
வருதே நிலைமண் டிலப்பா இசைந்தே
கடைசி வரிக்கு முன்வரும் வரியே
ஒருச்சீர் குறைந்தே மூன்றாய் வந்தால்
அதுவே நேரிசைப் பாவகை
எனவே நானும் அறிந்தேன் சரிதானே.
இகொ,
அருமை. ஆனால் உங்கள் பாடலில் சில விஷயங்கள் விட்டுப் போயிருக்கிறது.
எழுதுவதற்கு எளிமையான ஆனால் அருமையான ஓசை நயம் கொண்டது ஆசிரியப்பா. இதன் இலக்கணத்தை ஒரு தனி பதிவாகப் போடுகிறேன். அடுத்த பதிவு அதுதான்.
மரபு வடிவங்களை எளிமையாகச் சொல்லி மக்களிடம் அதை பிரபலப்படுத்தவேண்டும்.
அடுத்த வெண்பா பதிவு எப்போது?
Post a Comment
<< Home