பா

என் மரபுக் கவிதைகள்

My Photo
Name:
Location: சென்னை, தமிழ்நாடு, India

Monday, November 20, 2006

நவமீன்

தூக்கிலிடும் கயிறொத்து தொங்கியதோர் தூண்டில்ஊனை
ஆக்கிற்று தன்னுணவாய் அகன்றவாய்ப் பெருங்கெண்டை.
வாக்கின்றி துடித்தலறி வாழ்க்கையற்று மரித்ததனை
நோக்கியவோர் சிறுகெண்டை நுன்னறிவு பெற்றதுவே!
மீண்டுமங்கே தூண்டில்ஊனும் மிகமணமாய்த் தொங்கிடவே
வாண்டுமீன் தன்னறிவில் வந்திட்ட குறுகுறுப்பால்
வேண்டுமந்த ஊணென்ற வேகமிகு ஆசைகளே
ஆண்டததன் சிற்றறிவை; ஆதலினால் துணிந்ததுவே!

ஆனாலும்,

படிப்பினையை பெருங்கெண்டை தந்ததனால் மெல்லெனவே
கடித்தாலும் கடிநடுவே கடுமிரும்பைக் கடித்திட்டு,
துடிக்கவைக்கும் பல்வலியால் துவண்டந்தச் சிறுகெண்டை.
படிப்பினைகள் கிடைத்தற்றே! பலவிதமாய்க் கிடைத்தற்றே!!
உள்ளிருக்கும் கடுமைவரை ஊடாமல் உண்டாலும்
உள்ளறிவின் கவனமற்ற ஒருநாளில் முனைகவ்வ,
முள்முனை மறைமுள்ளும் பூட்டியது வாய்குள்ளே;
துள்ளியதால் மேன்மேலும் தூர்ந்தது விடுதலையும்.

இதன்பிறகு

தக்கையின் தவிப்பால் சிக்கியது மீனென்று
அக்கயிறு இழுத்தோன் ஆத்திரம் கொண்டான்;
இச்சிறு மீனுமோ என்முள் புகுமென
பிய்த்தெறிந்து வீசினன் தன்முள் விடுக்கவே!
பிழைத்தனம்! பிறந்தனம்!! மீனாக மீண்டும்,
பிழையினி செய்யோம், இலவசம் இவ்வாழ்க்கை
சவத்தில் பிறழ்ந்த சிறுகெண்டை நவின்றது.
கவர்ந்திடும் இலவசம் கொண்டது அபாயம்
தவறுகள் பலசெய வந்திடும் உபாயம்
நவமென நவமென நடந்திடும் வாழ்வு
துவங்கிடு இன்றே தொடங்கிடு இன்றே!


(இப்பாடல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா என்ற பாவகையில் முயன்றிருக்கிறேன். இலக்கணம் சரியா என்று பெரியோரைக் கேட்க வேண்டும்.)

(தூண்டில் என்ற சிறுகதை ,ஓகை பதிவில் இருகிறது. அதன் கதையே இக்கவிதை)

10 Comments:

Blogger ஷைலஜா said...

கொச்சகக் கலிப்பா ! ஆஹா! இலவசம்தலைப்பில் கதையே கவிதையாய் மிளிர்கிறது. என் சிற்றறிவுக்கு எட்டியவரை இலக்கணப் பிழைகள் தெரியவில்லை ஓகை. சரியாகவே வந்துள்ளது. எனினும் நீங்கள் சொல்வது போல் இதில் பெரியோர்கள் வல்லுனர்கள் வந்து படித்து சான்றிதழ் தரவேண்டும்.மரபினைக் காக்கும் தங்கள் மாண்பினிற்கு வாழ்த்து.
ஷைலஜா

November 21, 2006 10:06 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

கதையைப் படித்திருந்ததால் பாடல் நன்றாகவே புரிகிறது. இவ்வகைப் பாடல்களின் இலக்கணங்களை சொல்லிக் கொடுங்களேன்.

November 22, 2006 12:52 AM  
Blogger அபுல் கலாம் ஆசாத் said...

இனிய நடராஜன் அய்யா,

கதையும் கவிதையும் நன்றாக இருக்கின்றன.

அன்புடன்
ஆசாத்

November 23, 2006 3:40 PM  
Blogger ரவி said...

ஏ யாருப்பா நீங்கள்ளாம்...???

கதையை படிக்க போகிறேன்...நான் வரலை இந்த வெளாட்டுக்கு...

November 23, 2006 8:37 PM  
Blogger ஓகை said...

ஷைலஜா, ஆசாத் பாய், நன்றி.

November 23, 2006 9:51 PM  
Blogger ஓகை said...

இகொ,

நடை சற்று கடினமாகக் போய்விட்டது உண்மைதான். இதன் இலக்கணத்தை இங்கே இடுவதற்கு முன்னே ஆசிரியப்பாவின் இலக்கணத்தை போடுகிறேன். அது மிகவும் எளிமையானது. இந்த பாடலின் கடைசி பகுதி கூட ஆசிரியப்பாதான்.

November 23, 2006 9:56 PM  
Blogger ஓகை said...

செந்தழல் ரவி,

இக்கவிதையின் நடை சற்று கடினமாகப் போய்விட்டது. எளிமைப் படுத்தி மீண்டும் அளிக்கிறேன்.

படித்ததற்கு நன்றி.

November 23, 2006 9:58 PM  
Anonymous Anonymous said...

அண்ணா!
இலக்கணம் என்பதைப் பற்றி எனக்கு எதுவுமே!!தெரியாது...ஆனால் இது படிக்கப் புரிகிறது.உள்பொருள் வெளிப் பொருள் என உலக்களிக்கவில்லை.
அதைத்தான் எதிர் பார்க்கிறோம்.
உங்களுக்கு இது வசமாகிறது. தொடரவும்.
யோகன் பாரிஸ்

December 13, 2006 4:18 AM  
Anonymous Anonymous said...

அண்ணா!
இலக்கணம் என்பதைப் பற்றி எனக்கு எதுவுமே!!தெரியாது...ஆனால் இது படிக்கப் புரிகிறது.உள்பொருள் வெளிப் பொருள் என உலக்களிக்கவில்லை.
அதைத்தான் எதிர் பார்க்கிறோம்.
உங்களுக்கு இது வசமாகிறது. தொடரவும்.
யோகன் பாரிஸ்

December 13, 2006 4:19 AM  
Blogger ஓகை said...

யோகன், வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

இது ஒரு முழு இன்பம். சுவைத்தவரால் விட இயலாது. நிச்சயம் தொடர்வேன்.

இடுகை தோறும் வாருங்கள்.

December 13, 2006 8:47 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது